சிறப்பு செய்திகள்

மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ஏப்ரல் 24, 25-ம்தேதிகளில் வீடு வீடாக டோக்கன்- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவிப்பின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

கொரோனா நோய்த்தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, அம்மாவின் அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு
உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது.

அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1,89,01,068 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, 15.4.2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13.4.2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 24.4.2020 மற்றும் 25.4.2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.