திருவண்ணாமலை

யானை அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

யானை அட்டகாசம் செய்ததால் ஜவ்வாதுமலை கிராமத்தில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது ஜவ்வாதுமலை பகுதி ஆகும்.

இந்த மலைத்தொடரில் 262 மலை வாழ் மக்கள் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒற்றை யானை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஜவ்வாது மலை பகுதிக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவு தேடி வந்த யானை ஒன்று மாட்டுக்கானூர், அத்திப்பட்டு, சித்தாலூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஐந்து குடிசை வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மலை கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் ஐந்து குடும்பத்தினருக்கும் அரிசி மற்றும் 2,500 ரூபாய் நிவாரணத்தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும் வீடு சேதமடைந்த முதியவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின் போது ஜவ்வாது மலை ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் வெள்ளையன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, வனச்சரகர் குணசேகரன், வட்டாட்சியர் வெங்கடேசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்படபல்வேறு அரசு அலுவலர்கள கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.