தற்போதைய செய்திகள்

யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தான் புதுமை பெண் திட்டம் உள்ளது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை,

25 ஆயிரம், 50 ஆயிரம் எங்கே, ஆயிரம் ரூபாய் எங்கே, யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தான் புதுமை பெண் திட்டம் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடசென்னை மாவட்டத்தினுடைய அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் மாவட்ட இணை செயலாளராக சிறப்பாக பணியாற்றி மறைந்தவர் கோவிந்தராஜ். அவர் மறைந்தாலும் அவரின் கழக தொண்டை நாம் நிச்சயமாக மறக்க முடியாது. 1972ல் புரட்சித்தலைவர் திமுக என்ற தீய சக்தியை,கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து இயக்கத்தைத் தொடங்கியபோது அப்போது நம்முடைய 24 மனை செட்டியார்கள்.

குறிப்பாக ராயபுரம் தொகுதியில் செட்டியார் சமூகத்தைச் சார்ந்த கோவிந்தராஜ், போஸ்,முத்துராஜ் போன்றவர்கள் எல்லாம் அன்றைக்கு புரட்சித்தலைவர் ஆரமித்த இயக்கத்திற்கு வலு சேர்க்கின்ற வகையிலே ராயபுரம் தொகுதியில் பல அடங்குமுறைகளை எல்லாம் கண்டு இயக்கத்தை வளர்த்தவர். அவரின் புகழைப் போற்றுகின்ற வகையில் அவருடைய திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் தொகுதியை பொறுத்தவரையில் எப்போதுமே 24 மனை செட்டியார்கள் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவர்கள். நான் முதல் முதலாக 1991ம் ஆண்டு புரட்சித்தலைவியால் இந்த தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அன்றிலிருந்து ஆதரவு அளித்த ஒரு சமுதாயம் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயம்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி :தமிழக அரசு தாலிக்குத் தங்கம் என்ற திட்டத்தைப் புதுமை பெண் என்ற திட்டமாக மாற்றியுள்ளதே

பதில்: 2011ல் புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே கிராமத்தில் உள்ள பெண்களின் கஷ்ட நிலையை உணர்ந்தார். தாலிக்கு தங்கத்தை வாங்க முடியாத நிலை அவர்களுக்கு இருந்தது. அடிமட்டத்தில் உள்ளவர்களின் மனநிலை அதுவும் குறிப்பாக பெண்களின் மனநிலையை உணர்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா. இந்தியாவிலேயே தாலிக்குத்தங்கம் திட்டம் வேறு எங்கும் கிடையாது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று அனைவரும் வியப்பாக இருந்தனர்.

தங்கத்தை எப்படி எல்லோருக்கும் வழங்க முடியும் என்று நினைத்தனர். ஆனால் முடியாததைக் கூட முடித்துக்காட்டுகின்ற வல்லமை படைத்தவர் ஒரே தலைவி நம்முடைய புரட்சித்தலைவி அம்மா தான். இந்த திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்.

பட்டதாரியாக இல்லாதவர்களுக்கு 4 கிராம் தங்கம். பட்டதாரியாக இருந்தால் 8 கிராம் தங்கம். 2011 ஆரம்பிக்கப்பட்டது இந்த திட்டம். இந்த திட்டத்தில் 14 லட்சம் பெண்கள் பயன் பெற்றார்கள். செலவு செய்த தொகை 7 ஆயிரம் கோடி ரூபாய். 7 டன் தங்கம்.

இதுபோன்று தங்கத்தை அளித்தவர் நமது தங்கத்தாரகை. அந்த திட்டத்தை சின்னாபின்னமாக்கிவிட்டு, அந்த திட்டத்தை குளோஸ் செய்து விட்டு, தற்போது புதுமை பெண் என்ற திட்டத்தைகொண்டு வந்துள்ளீர்கள் .இந்த திட்டத்தில் நிதி உதவி பெறும் பள்ளியை சேர்க்கவில்லையே. அந்த பள்ளியில் பணக்கார மாணவர்களா படிக்கிறார்கள். இந்த திட்டத்தை எல்லோருக்கும் விரிவுபடுத்த வேண்டியது தானே.

தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள். இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கின்ற திட்டத்தை முடக்கியது ஏன். இன்றைக்கு யானை பசிக்கு சோளை பெறிபோல புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். தமிழக பெண்கள் 10 வருடத்திற்கு மேல் அனுபவித்த திட்டத்தை முடக்கியது மூலம் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது இந்த விடியா அரசு.

அந்த பெண்களின் கோபத்திற்கு இந்த அரசு நிச்சயமாக ஆளாகும். எடப்பாடியார் ஆட்சியில் அரை சவரன் என்பதை ஒரு சவரனாக வழங்கினார். இதுபோன்ற மகத்தான திட்டத்தை மூடுவிழா செய்து விட்டார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.