தற்போதைய செய்திகள்

யாராலும் தொட்டு பார்க்க முடியாத எஃகு கோட்டை கழகம் – துணை முதல்வர் பேச்சு

தேனி

ெதாண்டர்களிடம் தான் கட்சியும், ஆட்சியும் இருக்கிறது. கருணாநிதியால் அழிக்க முடியவில்லை. ஸ்டாலினாலும் முடியாது. யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத எஃகு கோட்டையாக கழகம் திகழ்கிறது என்று பெரியகுளம் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் மற்றும் பூத் கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நடக்க இருக்கின்ற 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது எங்கள் கடமைகளை சிறப்பாக ஆற்றுவோம் என்று உற்சாகத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலத்திலிருந்து நமது கடமைகளை, பணிகளை அனைவரும் சரியாக சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறோம். அதன் மூலம் கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற் பெற்றிருக்கிறோம்.

தேனி மாவட்டத்திற்கு மிகப் பெரிய பெருமை இருக்கிறது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரை முதல்வராக ஆக்கிய மாவட்டம். அந்த பெயரையும், பெருமையையும் பெற்ற மாவட்டம் நமது மாவட்டம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று தமிழகத்தில் வெற்றி பெற்ற தொகுதி தேனி நாடாளுமன்ற தொகுதியாகும்.

தேனி மாவட்டத்தில் எவ்வாறு தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்பதையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் நமது கடமையை, பணியை செவ்வனே செய்து அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து நமது மாவட்டத்திற்கு மிகப்பெரிய புகழும், நற்பெயரும் உண்டு என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கழகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் யாராலும் வெல்ல முடியாக இயக்கமாக மாற்றினார். 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக இருந்த கழகத்தை 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்து கழகத்திற்கு வந்த சோதனைகள், வேதனைகளை தாங்கி வெற்றி பெற்று சவால்களை ஏற்று ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தூய தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக எந்த கொம்பாதி கொம்பனாலும் வந்தாலும் அசைக்க முடியாக எஃகு கோட்டையாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் எனக்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கழகம் தான் ஆட்சி பொறுப்பில் இருக்கும் என்று சூளுரைத்து முழக்கமிட்டார். அவர் எந்த எண்ணத்தில் சூளுரைத்தாரோ அதை தெய்வ வாக்காக கொண்டு செயல்படும் எண்ணம் எல்லாம் நமது இதயத்தில் நிறைந்திருக்கிறது. அதனால் தான் இன்றைக்கு இந்திய திருநாட்டில் இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் பார்த்து, வியந்து பாராட்டுகின்றன. உண்மையான, விசுவாமிக்க தூய தொண்டர் ஒருவரைக் கூட நமது கழகம் இழக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறோம்.

யாரோ ஒருவர் இங்கிருந்து மாற்று கட்சிக்கு போயிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் யாரென்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் தீய சக்திகளை நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்திற்காக தான் உருவாக்கினார். அந்த நோக்கத்திற்காக பாடுபட்ட புரட்சித்தலைவிக்கு தமிழக மக்கள் 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியே மீண்டும் ஆளும் உரிமையை தந்து பெருமைப்படுத்தினர்.

அவர் தெய்வமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க அந்த வரலாற்றை மீண்டும் படைக்க நமக்கு நல்ல சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் கழகம் தான் ஆட்சியில் அமர்ந்தது என்ற வரலாற்றை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கின்றது.

நடந்து முடிந்த பல்வேறு தேர்தல்களில் கழகம் மாபெரும் வெற்றியை பெறுவதற்கு காரணமானவர்கள் தொண்டர்கள் தான். தொண்டர்கள் எழுந்து நின்று நெஞ்சை நிமிர்த்தி வேலை பார்க்கிறார்களோ அந்த தேர்தல்களில் எல்லாம் கழகம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. புரட்சித்தலைவியின் எனக்கு பின்னாலும் கழகம் தான் ஆட்சியில் இருக்கும் என்ற சத்திய வாக்கினை நிரூபிக்கும் வகையில் நாம் பணியாற்றிட வேண்டும்.

ஏன் என்று சொன்னால் நமது இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டன் முதல்வராகலாம். கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வரலாம் என்ற வரலாற்றை பார்க்கிறோம். இன்று கீழே அமர்ந்திருப்பவர்கள் நாளை மேலே வந்து அமரும் வாய்ப்பு அமையும் என்ற நிலை நமது இயக்கத்தை தவிர மற்ற எந்த இயக்கத்திலும் இல்லை என்பதை நான் சுட்டிக் காட்ட கடமைபட்டுள்ளேன்.

வருகின்ற தேர்தலுக்கான முதல் பணியாக வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. நாம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தற்போது கழகத்தின் சார்பாக, மகளிர் மட்டுமே பங்கு பெறும் கமிட்டி, பாசறை சார்பாக என மூன்று வகையான பூத் கமிட்டியை அமைத்திருக்கிறோம். இன்றும், நாளையும் நாம் எந்த வாக்குச்சாவடி கமிட்டியில் இருக்கின்றோமோ அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்களா என்பதை சரிபார்க்க வேண்டும்.

யாரேனும் வாக்காளராக பதிவு செய்யவில்லை என்றால் அவரை வாக்குசாவடிக்கு அழைத்து சென்று வாக்காளராக பதிவு செய்ய உதவ வேண்டும் என்பது தான் நமது முதல் கடமையாகும். தமிழகம் முழுவதும் சுமார் 30 சதவிகிதத்தினர் புதிய வாக்காளர்களாக சேரும் வாய்ப்பு உள்ளது. நாம் கடந்த காலங்களில் இப்பணியை சிறப்பாக செய்திருக்கிறோம். புதிய வாக்காளர்களை சேர்த்த பின் அவற்றை சரிபார்க்கும் பணியையும் நாம் ஆற்ற வேண்டும். மேலும் இறந்தவர்களின் பெயரை நீக்குதல் மற்றும் வேறு பகுதிகளுக்கு சென்றவர்களின் பட்டியலை திருத்தம் செய்தல் போன்ற பணிகளையும் நாம் செவ்வனே ஆற்ற வேண்டும். அடுத்தடுத்த பணிகள் குறித்த நாம் பல்வேறு நிலைகளில் ஆலோசனை வழங்கப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணப்படி தேனி மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டையாக உருவாக்குவதற்கு நாம் என்றைக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம். இதை நாம் பலமுறை செயல்படுத்தியிருக்கிறோம். பேசியவர்கள் ஒருவர் இங்கிருந்து சென்றிருக்கிறார் என்று சொன்னார்கள். நான் அவருடைய கருத்திற்கு எந்த பதிலும் சொன்னதில்லை. எனென்றால் ஒட்டு மொத்தமாக கூறவேண்டுமென்றால் அவர் நல்லவர் இல்லை. அவரை பற்றி நானும் புரிந்திருக்கிறேன்.

நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். மற்றொரு கட்சியில் சேர்ந்தவுடன் என்ன சொல்கிறார் என்றால் நமது கழகத்தை அழித்து விடவேண்டும் என்கிறார். இது நடக்குமா? கழகத்தை அழிக்க கருணாநிதியாலும் முடியல. ஸ்டாலினாலும் முடியாது. யாராலும் முடியாது நமது கழகத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்ற நிலையை தொண்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் நமது கழகம். தொண்டர்களிடம் தான் இன்று கட்சியும், ஆட்சியும் இருக்கிறது.

நாங்கள் ராஜ பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல. மிட்டா மிராசுதாரர்கள் இல்லை. சாதாரண தொண்டர்கள். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடைமுறை படுத்திய திட்டங்களை எல்லாம் அடிபிறலாமல் மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறார். அதுதான் நாம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு காட்டும் நன்றியாகும்.

அவர்களுடைய வழியில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அவரவர் பொறுப்புக்களை உணர்ந்து கழகம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாடு பணியாற்ற வேண்டும். வெற்றிக்கனியை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அது தான் நாம் ஆற்ற வேண்டிய கடமை. அதற்கான முதல்பணி வாக்காளர் சேர்த்தல் பணியாகும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முருக்கோடை ராமர், வசந்தா நாகராஜ், முன்னாள் எம்.பி ஆர்.பார்த்திபன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதாநடேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.டி.கணேசன், செல்லமுத்து, அன்னபிரகாஷ், சற்குணம், இளையநம்பி, கொத்தாளமுத்து, லோகிராஜன், வரதராஜன், அழகுராஜா, கதிரேசன், விமலேஸ்வரன், தர்மராஜ், நகர செயலாளர்கள் என்.வி.ராதா, கிருஷ்ணகுமார், கண்ணம்மாள்கார்டன் ராஜேந்திரன், பழனிராஜ், அருண்குமார், ஜெகதீஷ் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பூத் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.