சிறப்பு செய்திகள்

ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு பணி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை

இந்திய திருநாட்டின் ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரமரணமடைந்த பெ.மதியழகன் மனைவி தமிழரசி என்பவருக்கு, அரசுப்பணி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தை சேர்ந்த பெ.மதியழகன் என்பவர், இந்திய ராணுவம் 17-வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணிபுரிந்து ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரியின் போர் தாக்குதலால் கடந்த 4.6.2020 அன்று வீரமரணம் அடைந்தார்.

வீரமரணமடைந்த பெ.மதியழகனின் குடும்பத்தார்களான அவரது மனைவி தமிழரசி, அவருடைய மகன் ம.ரோகித், மகள் ம.சுபஸ்ரீ, அவரது தந்தை பெத்தாகவுண்டர், தாயார் ராமாயி ஆகியோர் எடப்பாடி பயணியர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வீரமரணமடைந்த பெ.மதியழகன் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தார்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, இந்திய திருநாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு தன் உயிரை தியாகம் செய்ததற்காக பெ.மதியழகனின் மனைவி தமிழரசி என்பவருக்கு, அரசுப் பணி வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.