சிறப்பு செய்திகள்

ரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்ைன

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் தற்பொழுது நாளொன்றுக்கு 700 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பினை தொடர்ந்து கண்காணித்திடவும், கடல்நீரினை குடிநீராக்கும் திட்டம், கிணற்று தளங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் தேவையான அளவு குடிநீர் வழங்க நீர் இருப்பில் உள்ளது.

சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நாளொன்றுக்கு 1895 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 60 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், செங்கல்பட்டு நகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இத்திட்டப் பணிகளை செயலாக்கத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

மத்திய ஜல்சக்தி துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.1,463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளை துவக்க விரைந்து ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளான அக்டோபர் 2ம் நாள் முதல் 100 நாள் பிரச்சாரம் என்ற திட்டத்தை துவக்கி அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தார். முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 37 ஆயிரம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 54,439 அங்கன்வாடிகளில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஜல் சக்தி மிஷன் திட்ட நோக்கத்தின்படி அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதி செய்து அடுத்த 3 வாரங்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தலைமையிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே நாளொன்றுக்கு அதிகளவு கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நாள்தோறும் 14,000 முதல் 15,000 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தொற்றுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,96,378 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,83,923 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 8,856 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 26.10.2020 அன்று வரை 17,58,711 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 8,92,748. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 2,14,040 ஆகும்.

முதலமைச்சரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று பாதித்த நபர்களை உடனடியாக கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 26.10.2020 வரை 64,282 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 32.14 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம், நிறுவனங்களின்மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 1.4.2020 முதல் 24.10.2020 வரை ரூ2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் கவன குறைவாக இருக்க கூடாது. அலுவலர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், பேரூராட்சிகள் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.