தற்போதைய செய்திகள்

ரூ.2.75 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, ரூ.2.75 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஏற்கனவே இருந்த வட்டாட்சியர் அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. எனவே புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதலமைச்சர் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூ.2.75 கோடி 24 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்கள். இதனைத்தொடர்ந்து, நேற்று விளாத்திகுளம் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

புதிய வட்டாட்சியர் அலுவலத்தில் தரைத்தளம் 6,366 சதுர அடி, முதல் தளம் 6,366 சதுர அடி மற்றும் முன் தாழ்வாரம் 656 சதுர அடி என மொத்தம் 13,353 சதுர அடி பரப்பில் வரவேற்பறை, பதிவறை, வட்டாட்சியர் அறை, கணிணி அறை, அலுவலகம், தனி வட்டாட்சியர்களுக்கான அறைகள், கூட்டரங்கு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் எதிர்கால தேவையையும் கருத்தில்கொண்டு கூடுதல் இடவசதியுடன் கட்டப்படுகிறது. ஏற்கனவே உள்ள வட்டாட்சியர் அலுவலக பகுதியிலேயே புதிய கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்பசுவாமிகள் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கூட்ட அரங்கு கட்டுவதற்கான இடத்தினையும் தேர்வு செய்தார். தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பில் சிறிய சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி ஆட்சியர் விஜயா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பி.மோகன், விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் சரவணப்பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் யூனியன் ஆணையாளர் தங்கவேல், கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், மாவட்ட கவுன்சிலர் எஸ்.நடராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் என்.கேபி.வரதராஜ பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரூபன் வேலவன், விளாத்திகுளம் ஒன்றிய கழக செயலாளர் கே பால்ராஜ், ஒப்பந்தக்காரர் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.