தற்போதைய செய்திகள்

ரூ.25 கோடியில் நவீன கதிரியக்க இயந்திரத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் – அமைச்சர்கள் ஆய்வு

கோவை

கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன கதிரியக்க இயந்திரத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

முதலமைச்சரால் கடந்த 7.7.2020 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன கதிரியக்க இயந்திரத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இச்சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கதிரியக்க இயந்திரத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு கருவிகளை வழங்கிட கேட்டுகொண்டதற்கிணங்க, முதலமைச்சரால், கடந்த 7.7.2020 அன்று புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.25 கோடி மதிப்பீட்டில் லீனியர் ஆக்ஸ்லேட்டர் என்ற நவீன கதிரியக்க இயந்திரத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே எந்த அரசு மருத்துவமனைகளிலும் இவ்வளவு மதிப்பிலான புற்றுநோயை குணப்படுத்த கூடிய சிகிச்சை கருவிகள் இல்லாத நிலையில், சென்னையில்தான் முதன்முறையாக அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியானது அதிநவீன கதிர்விச்சை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்த கூடியது. முதற்கட்டமாக இந்த கருவியின் மூலம் 21 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே, புற்றுநோய்க்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. எவ்வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும். இக்கருவியின் மூலம் பலவிதமான புற்றுநோயை மிக துல்லியமாக விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளித்து நோயாளிகளை குணபடுத்த முடியும்.

மேலும், தனியர் மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற பல லட்சம் செலவாகின்ற நிலையில், அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்ககூடிய இக்கருவியானது கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியாற்றும் பணியாளர்கள் இடம், தேவையான அனைத்து வசதிகள் குறித்தும், உணவகத்தின் சுகாதாரம் மற்றும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.