தற்போதைய செய்திகள்

ரூ.56.75 கோடி மதிப்பீட்டில் 125 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

சென்னை

125 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் ரூ.56.75 கோடியில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரத்தநாடு தொகுதி உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் பேசுகையில், ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட பரங்கிவெட்டிகாடு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்து பேசியதாவது:-

2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 223 ஆக இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 533
ஆக அதிகரித்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ரூ.80.95 கோடி மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 125 கட்டடங்கள்
ரூ.56.75 கோடியில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரத்தநாடு தொகுதியில் 17 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 4 இடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 14 கட்டடங்களுக்கு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிய பரங்கிவெட்டிகாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டித் தரப்படும். புறம்போக்கு நிலங்களில் பயன்படுத்த முடியாத இடங்களை தவிர பயன்படுத்தக் கூடிய இடங்களில் கட்டடங்கள் கட்டித் தரப்படுகின்றன. நிலம் இல்லாத இடங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலம் பெற்று கட்டப்படுகின்றன. 40 சென்ட் நிலம்
இருந்தால், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.