தற்போதைய செய்திகள்

ரூ.87.06 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.87.06 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து 75 நபர்களுக்கு ரூ.44.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி மாரியம்மன் நகரில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் மாரியம்மன் நகர் முதல் நேரு நகர் வரை சுமார் 1.5 கி.மீ நீளத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி,

காமராஜர் நகர் பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் ரூ.4.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் ஆகிய கட்டிடம் கட்டும் பணி,

போடிப்பட்டி ஊராட்சி போடிப்பட்டியில் 14-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் உடுமலைப்பேட்டை – சின்னாறு சாலை முதல் போடிப்பட்டி சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பூமிபூஜையுடன் துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, சின்னவீரம்பட்டி ஊராட்சி இந்திரா நகரில் பாராளுமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தினையும் என உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.87.06 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சா துவக்கி வைத்ததார்.

தொடர்ந்து, அமுதராணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை சார்பில் 31 நபர்களுக்கு தலா ரூ.12,000 என ரூ.3,72,000 மதிப்பிலான முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 9 ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்காக தலா ரூ.1,00,000 மதிப்பில் ரூ.9,00,000/ற்கான நிதியுதவி,

சின்னவீரம்பட்டி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 4 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.24,00,000 மதிப்பிலான கடனுதவி, நலிவுற்றோர் மாற்றுத்திறனாளி நிதி திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.4,87,000 மதிப்பிலான கடனுதவி மற்றும் மகளிர்த்திட்டத்தின் சார்பில் 12 நபர்களுக்கு தலா ரூ.25,000 மதிப்பில் ரூ.3,00,000 மதிப்பிலான அம்மா இருசக்கர வாகன மானிய உதவித்தொகை என 75 நபர்களுக்கு ரூ.44,59,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நமது மாவட்டத்திற்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக சுமார் 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முழுபரிசோதனைக்கு பிறகே நமது மாவட்டத்திற்கு அனுப்பப்படுகின்றனர். பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் கே.மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) வெங்கடேஷ், உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், ஜீவானந்தம், உதவி பொறியாளர் கந்தசாமி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் பேச்சியம்மாள் (பெரியகோட்டை), கலாவதி (சின்னவீரம்பட்டி), சௌந்தர்ராஜ் (போடிப்பட்டி), உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், கூட்டுறவு சங்க தலைவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.