தற்போதைய செய்திகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை

தேனி

வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், சின்னமனூர் நகர கழகம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சோலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
சின்னமனூர் நகரம் கழகத்தின் கோட்டையாக விளங்கி வருகிறது. நமது மாவட்டமே கழகத்தின் கோட்டையாகும்.

அதனால் தான் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் நமது மாவட்டத்தில் விரும்பி போட்டியிட்டனர். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம்.

கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்றோம். கட்சியையும், ஆட்சியையும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா சொன்னது போல் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகமும், கழக ஆட்சியும் நிலைத்திருக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

இவ்வாறு எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசினார்.

முடிவில் நகர பொருளாளர் வேதநாயகம் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் சின்னமனூர் நகர நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.