தற்போதைய செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதன்முதலில் அதிக நிவாரணம் வழங்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் முதன்முதலில் வழங்கிய அரசு அம்மாவின் அரசுதான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அம்மாவின் அரசு, மீனவர்களின் நலனுக்காக, மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கையாள்வதற்கு இராமநாதபுரம், மூக்கையூர் கிராமத்தில் ரூபாய் 128.70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு 4.3.2019 அன்றும், குந்துக்கலில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு 19.9.2020 அன்றும் பயன்பாட்டிற்கு நான் துவக்கி வைத்தேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்க வேண்டுமென்ற மீனவர்களின் கோரிக்கை அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக, ஒரு படகின் விலையான ரூபாய் 80 லட்சத்தில், மத்திய அரசு 50 சதவிகிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என ரூபாய் 56 லட்சம் மானியமாக தரப்படுகிறது. எஞ்சிய தொகையை மீனவர்கள் தங்கள் சொந்த நிதி மற்றும் வங்கியின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூபாய் 17.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 70 சதவிகித மானியமாக ரூபாய் 12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 232 பயனாளிகளுக்கு படகு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் முதன்முதலில் வழங்கிய அரசு அம்மாவின் அரசுதான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,316.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2016-2017-ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,40,636 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 146 கோடி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், இராஜசிங்கமங்கலம் மற்றும் எட்டிவயல் ஆகிய இடங்களில் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 847 வேளாண் இயந்திரங்கள் 13 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக, விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதியில் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில், 205 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு மூலதன நிதியாக 10 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, அதன் மூலம் 990 பண்ணை இயந்திரங்கள் வாங்கப்பட்டு,
20 ஆயிரத்து 500 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 2020-21 ஆம் ஆண்டிலும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 50 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. நுண்ணீர் பாசனத் திட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில்

7 கோடியே 59 இலட்சம் ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகள் 7 ஆயிரத்து 175 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 7 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

தரமான இடுபொருட்களை இருப்பு வைத்து, விநியோகிக்கும் வகையில், 4 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களும், 3 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. மேலும், 4 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புகள் மானிய விலையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.