தற்போதைய செய்திகள்

வழக்கம் போல் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகிறது தி.மு.க.-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

வழக்கம் போல் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகிறது தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் பரவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, முன்னாள் துணைமேயர் திரவியம், பரவை பேரூர் கழக செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி இருப்பு குறைந்த அளவே உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் தொகுதிக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் தடுப்பூசி குறைந்தளவே வழங்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

நல்ல பெயர் வாங்க வேண்டும் என இவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நாங்கள் மக்கள் வெறுப்பை சம்பாதிக்கவில்லை. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.

ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. காற்றில் பறக்க விடும். அது போல திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் வகையில் தான் செயல்படுகிறது.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த திமுகவை நம்பி மக்கள் வாக்களித்தனர். தற்போது திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
மேகதாது அணையை இந்த அரசு கட்ட முடியாத அளவுக்கு செய்ய வேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் உள்ளனர்.

அவர்களுக்கு முதல்வர் ஆலோசனை கொடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்த வேண்டும். மக்கள் விரோத நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்தால் அதை தடுக்கின்ற பணியில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.