தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ராசா தயாரா? அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை

வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதம் செய்ய ராசா தயாரா என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

அதிமுக அரசு தொடர்பான திமுகவின் தொடர் விமர்சனம் குறித்தும், முதல்வர் தொடர்பாக ஆ.ராசா கருத்து குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ராசா என்ன ஐநா சபையா சான்றிதழ் அளிக்க? மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். விளம்பரத்திற்காக மட்டுமே பேசி வருகிறார். திமுக தமிழ்நாட்டிற்கு என்றைக்குமே எட்டாக்கனி தான் திமுக ஆட்சி ஒரு கானல் நீர் தான். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளார்கள்.

தேர்வில் 100 சதவீத மதிப்பெண்ணை பெற்ற ஆட்சி அதிமுக. திமுக 35 சதவீதத்திற்கும் குறைவாக தான் உள்ளது. எனவே 2021ல் அதிமுக மகத்தான வெற்றியை தொடர்ந்து பெறும். 2011-ம் ஆண்டு திமுகவுக்கு ஆட்சி என்பது கானல் நீர்போல் தான். திமுக அரசுடன் ஒப்பிடும் போது, இன்று 100 சதவீத மதிப்பெண் பெற்றது அதிமுக ஆட்சி தான் என்றார்.

அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் ஆட்சி அமைக்கப்போவதாக கூறி வருகிறார்? பாஜகவும் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அமைச்சர்,
புரட்சித்தலைவரை பொறுத்தவரை திமுக எந்த நிலையிலும் தலை தூக்கக்கூடாது என்று கழகத்தை ஆரம்பித்து வெற்றி கண்டார். தி.மு.க.வை பொறுத்தவரை இருண்ட களப்பிரர் ஆட்சி. எங்களை பொறுத்தவரை புரட்சித்தலைவர் ஆட்சி, கொள்கை, லட்சியம் ஆகியவற்றை சொல்லவும், கடைபிடிக்க எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. புரட்சித்தலைவரை இரவல் வாங்கும் போது அவர்கள் கட்சியில் தலைவர்களே இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராசா ஒரு வழக்கறிஞர். அவரை பொறுத்தவரை சட்டப்படியான விஷயங்கள் தெரிந்திருக்கலாம். 2ஜி வழக்கை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் தீர்ப்பை உலகம் எதிர்பார்த்து வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது தான் நியதி. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ள விஷயத்தில், இவரே தீர்ப்பு எழுதியதாக பேசினால் ஏற்க முடியுமா? அம்மாவைப் பற்றி இவர் பேசுகிறார். உச்சநீதிமன்றம் மறைந்தவர்கள் குறித்து பேசக்கூடாது என்று கூறிவிட்ட பின்னர், இது பண்பாடில்லை. அம்மா இறந்ததால் அவருக்கு சம்பந்தமில்லை என்று கூறிவிட்ட நிலையில், இவர்கள் மீது தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறதே. வழக்கறிஞர் ஜோதியிடம் மோத வேண்டியது தானே. அவர் கேள்விக்கு முதலில் ராசா பதில் சொல்ல வேண்டும்.

முதல்வர் தகுதி என்ன. ராசாவின் தகுதி என்ன. அவருடன் முதல்வர் வாதிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. வழக்கறிஞர் ஜோதி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. வரும் திங்கட்கிழமை என் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறேன், வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதம் செய்ய ராசா வருவாரா. உச்சநீதிமன்ற வழக்கில், தண்டனை பெறும் நிலை வரும் என்பதால் தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார். 11 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கு தொடர்பாக அனைவருக்கும் தெரியாது. தற்போது அவரே பேசி மாட்டிக் கொண்டார்.

பொதுமக்களும் கட்சியினரும் எதிர்பார்த்தபடி அம்மா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை பெறப்பட்டதால், விசாரணை நிற்கிறது. தடை விலக்கப்பட்டு விசாரணை நடந்து, அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். உண்மை தெரிய வேண்டும் என்பதே கழகத்தின் எண்ணம். திமுக கொள்கை, லட்சியத்தை சொல்ல வேண்டும். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். ராசா விரக்தியடைந்து வார்த்தைகளை அள்ளி வீச வேண்டாம்.

திமுக மீது சர்க்கரை, சுடுகாடு என பல்வேறு ஊழல்கள் குறிப்பாக கூவத்தை சுத்தப்படுத்துவதற்காக திட்டமிட்டு, முதலை வந்ததாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான். இனிமேலாவது திமுகவின் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

தொடர்ந்து டிஎன்பிசி தேர்வு குறித்த கேள்விக்கு நிலுவையில் இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், பணி நியமன கலந்தாய்வு போன்றவை படிப்படியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளும் திறக்கப்பட்டிருக்கின்றது. பொதுப்போக்குவரத்தும் தொடங்கியிருக்கிறது. எனவே விரைவில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிசி முன்னெடுக்கும், விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.