தற்போதைய செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சாடல்

கோவை,

150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் கோவை இதய தெய்வம் மாளிகையில் முன்னாள்‌ அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றியை மோசடியால் தி.மு.க. பறித்து விட்டது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை தி.மு.க. செய்துள்ளது. வாக்காளர்களுக்கு கொலுசு மற்றும் ஹாட் பாக்ஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவின்போது 5 மணிக்கு பிறகு சூழ்நிலையை மாற்றியுள்ளார்.தி.மு.க.வுக்கு மோசடி செய்வது கைவந்த கலை. இதற்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும். நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டும் தி.மு.க.வின் மோசடியால் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். இது நிரந்தரம் அல்ல.

தமிழகத்தில் பல ஜாம்பவான்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் தி.மு.க, அதிகாரிகள், காவலர்களுடன் கூட்டணி அமைத்து நமது வெற்றியை பறித்துள்ளனர். வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலின் போது கூட காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது.

இத்தேர்தலில் கழகத்துக்கு பெரும்பான்மை இருந்தும் வெற்றி பெற பெரிய போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. தோல்வி காரணமாக கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போட்டு பழிவாங்கி வருகின்றனர். இதுபோன்ற அராஜகத்தை பார்த்ததில்லை.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை காவல்துறையினர் மறந்து விட்டனர். காவல்துறையினரை தி.மு.க. வேறு என்ன செய்து விட முடியும் வேறு இடத்திற்கு தானே மாற்ற முடியும். எதுவும் நிரந்தரமில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தோற்று இருந்தாலும் கூட வாக்களித்த மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். கழக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம்.

சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது. கழக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்தி ஏழை மக்களுக்கு துரோகம் விளைவித்த தி.முக
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

கழக ஆட்சியின்போது சொத்துவரியை உயர்த்த வேண்டிய சூழ்நிலை வந்தபோதும் கூட அதை ரத்து செய்து பொதுமக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது கழக அரசு. ஆனால் தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தி தமிழக மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது.

மத்திய அரசை எதிர்ப்போம் என கூறும் தி.மு.க. சொத்து வரி உயர்வில் மத்திய அரசை எதிர்க்க வேண்டியது தானே?
கொலுசும், ஹாட்பாக்சும் தந்த தி.மு.க. பின்னாடியே வரியையும் உயர்த்தி வழங்கி மக்களுக்கு பெரிய வலியை தந்துள்ளது. இது மக்கள் விரோத செயல். இந்த சொத்து வரி உயர்வு என்பது மக்களை கசக்கி பிழியக்கூடிய வரியாகும்.

கொரோனா காலகட்டத்திலிருந்து பல்வேறு சிரமங்களிலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு வரி கட்டும் போது தான் இந்த வரியின் விலை புரியும். பல மடங்கு சொத்து வரி உயர்ந்துள்ளதை புரிந்து கொள்வார்கள். ஆகவே 5-ந்தேதி (இன்று) சொத்து வரி உயர்வை கண்டித்தும், கழக அரசின் மக்கள் நல திட்டங்களை நிறுத்தியதை கண்டித்தும், தி.மு.க.வுக்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை குலுங்கியது எனும் வகையில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி பேசினார்.