தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாடல்

திண்டுக்கல்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல்லில் வருகிற 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாநகராட்சி, பேரூராட்சி, நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார், பி.கே.டி. நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கழகம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 28-ந்தி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும்.
தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. 3 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு இப்போது நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதும் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிடுகிறது தி.மு.க. அரசு. அதே போல் 24 மணி நேரமும் இருந்த மின்சாரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

மின் தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்குவதாக கூறிய தி.மு.க. இன்று வரை வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது. இதனை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் அமையும்.

ஆனால் வாக்குதிகளை நிறைவேற்றிய கழக ஆட்சி மீண்டும் வரவில்லையே என்ற ஏக்கத்தோடு இல்லத்தரசிகள் வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் உள்ளனர். குடியரசு தலைவருக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம். அவரிடம் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த போராட்டம் அமையும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.