சிறப்பு செய்திகள்

வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றுவோம்-துணை முதலமைச்சர் உறுதி

கோயம்புத்தூர்,

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்

மேட்டுப்பாளையம் தொகுதி கழக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ், அவிநாசி தொகுதி கழக வேட்பாளர் ப.தனபால், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கூடலூர் தொகுதி கழக வேட்பாளர் பொன்ஜெயசீலன், குன்னூர் தொகுதி கழக வேட்பாளர் கப்பச்சி வினோத், உதகை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் போஜராஜன் ஆகியோரை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தி பேசினார்.

பிரச்சாரத்தின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கழகம் ஆட்சி செய்த கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு அதற்கான அங்கீகாரமாக மத்திய அரசின் விருதுகளை ஏராளமாக குவித்துள்ளது.

ஆனால் முதல்வர் கனவில் இருக்கும் தி.மு.க.வினரோ பொதுமக்கள் நடத்தும் பிரியாணி கடைகளுக்கு சென்று காசு கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு கடை உரிமையாளர்களை தாக்குகிறார்கள்.

பெண்கள் நடத்தும் அழகு நிலையங்களுக்கு சென்று அவர்களிடம் பணம் கேட்டு தாக்குதல் நடத்துகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இவ்வளவு அராஜகம் செய்யும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும். அதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதனை தடுத்து நிறுத்துவார்கள்.

ரூ.3500 கோடி அளவுக்கு நில அபகரிப்பு, தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு போன்றவை திமுகவின் அராஜக ஆட்சிக்கால சான்றுகள். ஆனால் கழக அரசு ஆண்ட கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கழக அரசு திகழ்கிறது. ரூ.1,26,000 கோடி நிதியில் கல்விக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருந்தார்.

பொருளாதார முன்னேற்றத்தை மாணவ மாணவிகள் அடைய வேண்டும் என்பதற்காக 16 வகையான கல்வி உபகரணங்களை கையில் கொடுத்து கல்வியில் அவர்களை ஊக்கப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

2011, 2016 தேர்தல் வாக்குறுதியில் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 ஆக இருந்ததை தற்போது 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 36 லட்சம் பேருக்கு ரூபாய் 1000 மாக இருந்த முதியோர் உதவி தொகையை இப்போது 2,000 ஆக உயர்த்தப‌பட்டுள்ளது.

மக்களின் முன்னேற்றத்திற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கினார். தற்போது இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் மீண்டும் அம்மா ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இந்த முறையும் எங்களுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இப்பிரச்சார நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், எம்.எஸ்.ராஜ்குமார் உள்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.