தற்போதைய செய்திகள்

வாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

வேலூர்

வாணியம்பாடியில் தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிலையொட்டிய 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணி புரிந்து வருகின்றனர். வாணியம்பாடி பகுதியில் தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்துவதற்காக மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டுமென வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாணியம்பாடியில் விரைவில் தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்திடும் வகையில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் ரூ.20 கோடியே 37 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்படவுள்ள மேம்பாட்டு மையம் மூலம் அதிகளவு இளைஞர்களுக்கு மத்திய தோல் ஆராய்ச்சி கழகத்தின் பயிற்சியாளர்களை கொண்டு 1 வருடம் அல்லது 2 வருடத்திற்கான மிக சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாணியம்பாடி தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.