தற்போதைய செய்திகள்

விடாமுயற்சி மன தைரியத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அறிவுரை

திருப்பத்தூர்

விடாமுயற்சி, மன தைரியத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட 22 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சார்ந்த பிளஸ்-1 படிக்கும் 3031 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் வழங்கினார்.

வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற இந்நிழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய தாய்மார்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கிட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கல்வி பொருட்களையும், மிதிவண்டிகள், மடிகணினிகள் மற்றும் உயர்கல்வியை தொடர ஊக்கத்தொகை வழங்கி எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வர வழிவகை செய்து கொடுத்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழகத்தை வழிநடத்தி வரும் முதலமைச்சர் தொடர்ந்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர்எ சத்துணவு திட்டத்தையும், அம்மா அவர்கள் கல்வி இலவச திட்டங்களையும், கட்டாய கல்வி திட்டத்தையும் செயல்படுத்தியன் விளைவாக படிக்கும் மாணவர்கள் விகிதம் அதிகரித்து வந்துள்ளது.

தற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை, எளிய தாய்மார்களின் பிள்ளைகளும் மருத்துவராகலாம் என்ற கனவை நனவாக்கும் விதமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றியதன் விளைவாக ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் படித்த மாணவி சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து சாதித்துள்ளார்.

ஆகவே மாணவ, மாணவிகளின் குறிக்கோள் ஒன்றே படிப்பது மட்டுமே என்று நினைத்து பொருளாதாரத்தையும் குடும்ப சூழ்நிலையினை எண்ணி கவலைப்படாமல் விடாமுயற்சியுடன், மனதைரியத்துடன் படித்து எதிர்கால வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர் கனவை நனவாக்கி வாழ்க்கையில் சிறக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.

முடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

இந்த விழாவில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சதாசிவம், மாநில தொழிலாளர் நலவாரிய குழுஉறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் முனிநாதன், மணிமேகலை, வட்டாட்சியர் சிவப்பிரகாஷம், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவசக்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மஞசுளாகந்தன், துணைத் தலைவர் பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேவராஜி, உமாபதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.