தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றச்சாட்டு

தூத்துக்குடி

மின்கட்டணம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், மின்வெட்டும் அதிகரித்து விட்டது என்றும் விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றம்சாட்டி உள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டியில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

இடைக்கால பொதுச்செயலாளராக கழகத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கேற்ப தி.மு.க. அரசுக்கு எதிராக நடத்தும் முதல் போராட்டம் என்பதால் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்டதில் பெரும் திரளாக கலந்து கொண்டு விடியா திமுக ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதால் தன்னுடைய தற்பாதுகாப்புக்காக பிரதமர் மோடியின் பெயரை ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி சொல்கிறார். இவரைப்பற்றி இதுவரை மோடி எந்த கருத்தையும் கூறாத நிலையில் தன்னுடைய தற்பாதுகாப்புக்காக தான் பிரதமர் மோடியின் பெயரை தற்போது பயன்படுத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும் கருணாநிதியை எதிர்த்து 1972ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கழகத்தை துவக்கிய போது தொண்டர்களிடையே எப்படி ஒரு எழுச்சி காணப்பட்டது. அதேபோல் தான் தற்போது கழகத்தில் ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கும், எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறார் என்று கூறினார்கள். ஆனால் தமிழகம் தற்போது இருளில் மூழ்கி இருக்கிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளது.

மின் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கழகத்தை பற்றி குறை சொன்னவர் (சசிகலா) காணாமல் போய் விட்டார். கட்சியில் இல்லாத அவரின் கருத்துக்களை நாங்களும் ஏற்க மாட்டோம், மக்களும் ஏற்க மாட்டார்கள்.

தி.மு.க. அரசால் சீல் வைக்கப்பட்டிருந்த கழகத்தின் தலைமை கழக அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளது. எனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தான் அதிமுக என்பதை உறுதி செய்திருக்கிறது.

அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பா.ஜ.க தெளிவாக கூறி விட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர்கள் வரை தற்போது யாரும் அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினை குறித்து பேசியதில்லை. அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் தலையிட மாட்டோம் என்று தெரிவித்து விட்டனர்.

கழக தலைமைக்கழக அலுவலகத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். யார் உள்ளே சென்றார்கள் என்பது குறித்து டிவி மீடியாக்களில் வந்த செய்திகள் அனைத்தும் தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.