சிறப்பு செய்திகள்

விரைவில் சூறாவளி பிரச்சாரம்: துணை முதலமைச்சர் அறிவிப்பு

தேனி

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார

தேனியில் மாவட்ட கழகம் சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கழகத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தை வளர்த்தெடுத்த புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கழகத்தை மாபெரும் இயக்கமாக, வரலாற்று சிறப்பு மிக்க இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார்கள். இன்று கழகத்தை தொண்டர்கள் வழிநடத்துகின்ற நிலையை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணுகின்றபொழுது இந்த இயக்கத்திற்கு நாம் எவ்வளவு தியாகம் செய்தாலும் போதாது.

இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. அதற்கு தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நமது இயக்கத்தை தியாக உணர்வு கொண்ட இயக்கமாக புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் வளர்த்தார்கள். தொண்டர்களால் ஆட்சியையும், கழகத்தையும் சிறப்பாக நடத்த முடியும் என்ற நடைமுறையை உருவாக்கினார்கள்.

அதனால் தான் கழகத்திற்கு எவ்வளவு பிரச்சினைகள், சோதனைகள் வந்தாலும், பொய்யாக, உண்மைக்கு மாறாக தகவல்களை சொல்லி நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும் மீண்டும் எழுந்து நின்று எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை கழகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டமும் யாராலும், தகர்க்க முடியாத வீர வரலாற்றை பெற்றிருக்கிறது. கழக நிறுவனர் புரட்சித்தலைவரை முதல்வராக உருவாக்கிய மாவட்டம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன் முறையாக தேர்தலில் நின்ற மாவட்டமும், முதல்வராக தேர்ந்தெடுத்த மாவட்டமும் நமது மாவட்டம் தான். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளர்கள் அனைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தான் வாக்கு சேகரித்தோம்.

32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியை தொடர்ந்து ஆளும் கட்சியாக தமிழக மக்கள் தொடர செய்தனர். வரும் 2022-ம் ஆண்டு நமது கழகத்தின் பொன்விழா ஆண்டாகும். பொன்விழா ஆண்டிலும் நமது கழக ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன்.

அதற்கு தொண்டர்களாகிய உங்களுக்கு நமது இயக்கத்திற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதுதான் சாதாரண தொண்டர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையையும் பெற்றுத்தந்த புரட்சித்தலைவருக்கும், புரட்சித்தலைவிக்கும் நாம் செய்கின்ற நன்றியாக இருக்கும்.

பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளுகின்ற உரிமையை கழகத்திற்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கின்றனர். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இல்லாத நிலையில் இந்த இயக்கத்தை எப்படியாவது அசைத்து விடலாம் என்று நினைத்தவர்களின் தீவிர முயற்சியை முறியடிக்கின்ற ஆற்றல் படைத்தவர்கள் தான் நமது தொண்டர்கள்.

ஒரு தலைவர் தொண்டனுக்கு உத்தரவிடுவது தான் வழக்கம். ஜனநாயக முறையிலான நமது கழகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையில் தலைமை கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் தனது பேச்சின்போது எப்பொழுது தான் ஒருங்கிணைப்பாளர் தனது பிரச்சாரத்தை துவக்க போகிறீர்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். அதனை நான் பெருமையாக கருதுகிறேன்.

அடிமட்ட தொண்டனும் கேள்வி கேட்கும் ஜனநாயக மரபை கொண்ட ஒரு இயக்கமாக நமது கழகம் விளங்கி கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஜனநாயக மரபு மற்ற கட்சிகளில் இல்லை. விரைவில் ஒரு நல்ல நாளில் எனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி தமிழகம் முழுவதும் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பிரச்சாரம் செய்வேன்.

இன்றைய கூட்டத்தின் நோக்கமான சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணியான வாக்குச்சாவடி குழுக்களை நீங்கள் நேர்த்தியாக அமைத்திருக்கிறீர்கள். அதில் குறைகள் வந்து விடாதபடி தேர்தல் பணிக்குழுவினர் பார்த்துக் கொள்ள வேண்டும். 10 ஆண்டு கால புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் திட்டங்கள் அனைத்து இல்லங்களையும் அலங்கரித்திருக்கிறது. நான் பெருமையாக சொல்லவில்லை. இன்று தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான, நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது என்று எதிர்கட்சியினரும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

மழை பெய்திருக்கிறது. குளங்கள் நிரம்பியுள்ளன. அனைத்து பகுதிகளிலும் சாலைகள், அடிப்படை வசதிகள் சிறப்பாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய திட்டங்கள் வந்து சேர்ந்திருக்கிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாய்மார்கள், சகோதரிகளின் நல்வாழ்வுக்கென பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது அம்மா அரசின் 10 திட்டங்களாவது சென்றடைந்திருக்கும்.

கடந்த 3 மாதங்களில் சிறப்பு நிதியும் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இந்தியாவிலேயே தமிழகம் நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு, விவசாய உற்பத்தி, தொழில்துறை, ஏழை எளியோருக்கு வீடுகள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தலைசிறந்த மாநிலமாக விளங்கி வருகின்றது.

போடி தொகுதியில் 2016 தேர்தலின் போது நான் கொடுத்த வாக்குறுதிகளில் குரங்கனி முதல் டாப்ஸ்டேசன் வரை சாலை அமைத்தல் திட்டத்தை தவிர அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். குரங்கனி முதல் டாப்ஸ்டேசன் வரையிலான சாலை வசதி அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்து பணிகளும், திட்டங்களும் நிறைவாக வந்து சேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எதிர்க்கட்சியினர் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத வெறுப்பில் பேசி வருகின்றனர்.

அவர்களை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாமும் மக்களை சந்திப்போம். அம்மா அரசின் சாதனைகளை எடுத்து சொல்வோம். ஏதேனும் விட்டுப்போன பணிகள் இருந்தால் அவற்றையும் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றையும் நிறைவேற்றுவோம். தேர்தல் கால பணிகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டும்.

சட்டமன்ற தொகுதிக்கு ஒருவருக்கு தான் வேட்பாளருக்கான வாய்ப்பு கிடைக்கும். நமது இயக்கத்தில் தான் பல்வேறு பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மா ஊராட்சி தேர்தலின் மூலம் 2 லட்சம் பதவிகள் நமது கட்சியினரை வந்தடைந்தது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் தலைவர், உறுப்பினர்களாக கழகத்தினர் உள்ளனர். 2006-லிருந்து 2016 வரை புரட்சித்தலைவி அம்மா அவர்களும், நானும் தான் வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்தோம்.

பல்வேறு நிலைகளில் தேனி மாவட்டத்திற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய மிகப்பெரிய வாய்ப்பை, மிகப்பெரிய புண்ணியமாக 21 வருடங்கள் புரட்சித்தலைவி அம்மாவோடு பணியாற்றியதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பாக நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களை நான் உட்பட அனைவரும் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.

அந்த வெற்றியை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பதற்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்படும். கழகத்திற்கு மகத்தான வெற்றியை 234 தொகுதிகளிலும் பெற்றுத்தர வேண்டிய பணியை ஆற்றுவேன்.இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முடிவில் தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் நன்றி கூறினார்.