தூத்துக்குடி

விரைவில் வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்-மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் சபதம்

தூத்துக்குடி, ஜூன் 15-

தோல்வியை கண்டு யாரும் துவண்டு விடக்கூடாது. விரைவில் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபாடுவோம் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் சபதம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியை கண்டு யாரும் சோர்ந்து விடாமல் தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அனைத்து வட்ட செயலாளர்களும் உங்கள் பகுதிகளில் கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்கி கழக பணியாற்ற வேண்டும். விரைவில் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் மீண்டும் கழகம் அமோக வெற்றி பெற பாடுபடுவோம். தமிழகத்தில் ஏற்கனவே நல்லாட்சி தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அனைவரும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.