கன்னியாகுமரி

விலையில்லா முககவசம் வழங்கும் பணி- என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3.42 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா முக கவசம் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே முககவசங்கள் அணியும் பழக்கத்தினை மேலும், துரித படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், விலையில்லா முககவசங்கள் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தின், முதற்கட்டமாக, விலையில்லா முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட, வடசேரி, வணிகர் தெருவிலுள்ள நியாயவிலைக்கடையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் விலையில்லா முககவசங்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்தொடர் நடவடிக்கையாக, அனைத்து மாவட்டங்களுக்கும், நேரடியாக சென்று, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

கொரோனா தொற்றால், நமது நாடு மட்டுமல்ல, உலகளவிலும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை பற்றி மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவம் சார்ந்த புத்தகங்களில், கொரோனா என்ற வியாதி இருக்கிறது. அது தும்மல், இருமல் தான் அதனுடைய அறிகுறி என புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. அதாவது கொரோனா தொற்று என்பது ஒவ்வொரு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வேறுபடுகிறது. உதாரணமாக அமெரிக்காவில் இந்த கொரோனா நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நமது நாட்டிலும் இந்த கொரோனா பாதிப்பு வேறுபடுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இருமல், தும்மல், கைகுலுக்குதல் போன்றவற்றை செய்யாமல், சமூக இடைவெளியை கடைபிடிப்பதால், இந்த கொரோனா நோயின் தாக்கம் வேறுபடுகிறது. குறிப்பாக, அலுவலகங்களில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

அங்கு கிருமிநாசினி தெளித்து, சுத்தமாக வைத்த 48 மணி நேரத்திற்கு பிறகு தான் சக ஊழியர்கள் அந்த அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி, மருத்துவமனையில் Remedisivir என்ற மருந்தின் வாயிலாக, நோய் தீவிரடைந்த வயதானவர்களுக்கும், பல நோய்கள் உள்ளவர்களுக்கும், இந்த மருந்து மிக பயனுள்ளதாக இருக்கிறது.

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதால், நமது மாவட்டத்தில், கொரோனா நோயின் தாக்கம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நமது மாவட்டத்தின் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதில், நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை நிர்வாகம், பணியாற்றகூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் நமது மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து சிறந்த முறையில் பணியாற்றி வருவது, பாராட்டுக்குரியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஆகியவற்றில் பணிபுரியும் களப்பணியாளர்கள்;, வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசங்களை அணிய வேண்டும் என்று கண்காணித்து, முககவசங்கள் அணியாமல் வரும் பொதுமக்களை கண்டிப்பாக முககவசங்கள் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். நமது தமிழக அரசு, பொதுமக்களின் நலன் கருதி, அனைவருக்கும் முககவசங்களை வழங்க வேண்டும் என்பதற்காக, தற்போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான முககவசங்கள் இன்று முதல் நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், விலையில்லா முககவசங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய நகராட்சிகள் மற்றும் 55 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

இதில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளிலுள்ள, 78 நியாயவிலைக் கடைகள் வாயிலாக, 73 ஆயிரத்து 680 குடும்ப அட்டைகளிலுள்ள, 2 லட்சத்து 54 ஆயிரத்து 497 குடும்ப உறுப்பினர்களுக்கு, 5 லட்சத்து 43 ஆயிரம் முககவசங்களும், இதர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், வாயிலாக, 375 நியாயவிலைக் கடைகள் வாயிலாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 349 குடும்ப அட்டைகளிலுள்ள, 9 லட்சத்து 44 ஆயிரத்து 868 குடும்ப உறுப்பினர்களுக்கு, 19 லட்சத்து 7 ஆயிரம் முககவசங்களும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 453 நியாயவிலை கடைகள் வாயிலாக, 3.42 லட்சம் குடும்ப அட்டைகளை சார்ந்த, 11.99 லட்சம் குடும்ப உறுப்பினர்களுக்கு, 24.50 லட்சம் முககவசங்கள் வழங்கப்படுகிறது.
முககவசங்களை பெறும் பொதுமக்களாகிய நீங்கள், கொரோனா நோயை நமது மாவட்டத்திலிருந்து முற்றிலுமாக ஒழிப்பதற்கு, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் எம்.சேவியர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) த.மாதவன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) பா.சங்கரன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் (எ) சந்துரு, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைத்தலைவர் அ.சகாயராஜ், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.சாம்ராஜ், ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.ஜஸ்டின், அரசு வழக்கறிஞர் கே.சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.