தற்போதைய செய்திகள்

விலையில்லா முக கவசம் வழங்கும் பணி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முக்கவசங்களை வழங்கும் நிகழ்வை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆச்சிமங்கலம் நியாயவிலைக்கடையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒருவருக்கு இரண்டு வீதம் விலையில்லாமல் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 384 முழு நேரக்கடைகள், 203 பகுதி நேரக்கடைகள் என அனைத்து நியாயவிலை கடைகளிலும் விலையில்லாமல் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளின் மூலம் 1,14,185 குடும்ப அட்டைகளில் உள்ள 3,59,315 குடும்ப உறுப்பினர்களுக்கு தலா இரண்டு முகக்கவசம் வீதம் 7.19 லட்சம் முகக்கவசம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் சிரமப்படுவதை அறிந்த முதலமைச்சர் உத்தரவின் படி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், ஆதரவற்றவர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கொரோனா நோய் தொற்று குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்ட கபசுரக்குடிநீர் வீடுவீடாக வழங்கப்படுகின்றது. இதுவரை நான்கு முறை அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஆர்சனிக்ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. நமது இதயதெய்வம் அம்மா அவர்கள் கொடுத்த அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஆரம்பித்தவுடனே கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சத்தான உணவு, மருத்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களின் பங்கும் இன்றியமையாததாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத்பேகம், வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணைத்தலைவர் நா.முத்துக்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கூட்டுறவு சங்க பிரதிநிதி சு.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.