தற்போதைய செய்திகள்

விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா?ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி

சென்னை

விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. எங்கேயாவது குரல் கொடுத்தது உண்டா? என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: நாங்கள் சொன்ன பிறகுதான் திட்டங்களை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று ஸ்டாலின் தொடர்ந்து சொல்கிறார். இங்கே நீங்களும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

பதில்: இதற்காக எங்கேயாவது குரல் கொடுத்திருக்கிறார்களா? தேர்தலோடு சரி. அவர்கள் நாடாளுமன்றத்திலாவது குரல் கொடுத்தார்களா, கிடையாது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று சொல்லிச் சென்றார்களே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா? இல்லை, சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்களா? இல்லை. ஏதும் செய்யவில்லை. தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள்.

ஏனென்றால், அனைத்து கட்சியிலும் அவரவர்களின் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள். எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, அன்றைக்கு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாங்கள் செயல்படுகிறோம். வறட்சி நிவாரண நிதி 2,247 கோடி ரூபாய் கொடுத்தோம்.

அதேபோல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை கொடுத்தோம். இவ்வாறு தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிற காரணத்தால், அவர்களால் பயிர்க் கடனை செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் அதற்காக நாங்கள் பயிர்க் கடனை ரத்து செய்துள்ளோம்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்புகளையெல்லாம் நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே?

பதில்: தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேர்தல் அறிக்கைதான் வெளியிடுவார்கள். ஆனால், நடைமுறைப்படுத்துகிற அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஸ்டாலின் செல்லும் இடங்களிளெல்லாம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்போடு சரி, அதற்குமேல் எதையும் நிறைவேற்ற மாட்டார்.

எந்தத் திட்டத்தையும் அறிவித்தாலும் நிறைவேற்றியதே கிடையாதென்று அனைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தெரிவித்து வருகிறார். ஆனால், எங்கள் அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டும் என்ற நிலையை நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம்.

கேள்வி: கடன் சுமையைக் குறைப்பதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா?

பதில்: எதிர்காலத்தில் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

கேள்வி: விவசாயிகளுக்கு ரூபாய் 12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்திருந்தாலும், இந்த பட்ஜெட்டில் ரூபாய் 5,000 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளதே?

பதில்: இது நபார்டு வங்கியிலிருந்து வாங்கிய கடன். ஆகவே, நபார்டு வங்கியுடன் தொடர்பு கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நிதியை கொடுப்பார்கள்.

நபார்டு வங்கியுடன் தொடர்பு கொண்டு பேசி, அதை 5 ஆண்டுகளுக்கு பிரித்து கட்டுவோம். கடந்த முறை தள்ளுபடி செய்தபோதும் அப்படித்தான் நபார்டு வங்கியில் பின்பற்றினோம். அதே முறையை இப்போதும் பின்பற்றுகிறோம்.

கேள்வி: விவசாயிகளுக்கு சான்றிதழ் எப்போது கொடுப்பீர்கள்?

பதில்: கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 30 லட்சம் நபர்களுக்கு கொடுத்து விட்டோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.