தற்போதைய செய்திகள்

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை,

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி : பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பேசிய அமைச்சர் ஏ.வ,வேலு நாங்கள் எட்டுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளாரே.

பதில் : தி.மு.க சந்தர்ப்பவாத கட்சி. ஆரம்ப காலம் முதல் இதுபோல நடக்கிறது. எட்டுவழி சாலை திட்டம் நல்ல திட்டம். ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கான திட்டம். சேலம் செல்வது என்றால் 50 கிலோ மீட்டரை மிச்சம் செய்யலாம்.

எட்டுவழிச்சாலை ஓரமாக இருப்பவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டாலோ, அவர்களுடைய தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டாலோ, மாமரம் பாதிக்கப்பட்டாலோ, ஒரு மாமரத்திற்கு ரூ.40 ஆயிரம், தென்னை மரத்திற்கு ரூ.35 ஆயிரம், வீடுகள் மாற்றினால் வீடுகளைக்கட்டி தருகிறோம். நிலத்திற்கு பன்மடங்கு விலை தருகிறோம் என்று தெரிவித்தோம்.

அப்போது இவர்கள் எட்டுவழி சாலையை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பச்சை துண்டை கட்டிக்கொண்டு சொன்னது யார். பச்சை துண்டு அமைச்சர் ஏ.வ.வேலு பேசியுள்ளார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் தான் பச்சை துண்டை போட்டுக்கொண்டு வந்தார். இவரைத்தான் அமைச்சர் ஏ.வ.வேலு குறிப்பிட்டு சொல்கிறாரா,அன்றைக்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டம் வருவதை தடுத்து நிறுத்திவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பல்டி அடிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுவார்கள் இல்லையா. அதுபோல அமைச்சர் ஏ.வ.வேலு பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றி வருகிறார். மாமியார் உடைத்தால் அது மண் குடம்.

மருமகள் உடைத்தால் அது பொன்குடமா? இப்படி இன்றைக்கு வீடு தருகிறோம். பணம் தருகிறோம் என்று 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, விவசாயத்தை ஒழித்து, விவசாயிகளின் ரத்தத்தை குடித்து அதன் மீது விமான நிலையம் அமைக்க வேண்டுமா. இதன் காரணமாகத்தான் விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள்.

அரசு விவசாயிகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவர்கள் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக விவசாயிகளை அழித்து, ஒழித்து அதன் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.