தற்போதைய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் சுற்றித்திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை:-

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் சுற்றித்திரிந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாடு திரும்பியவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையொட்டி வெளிநாடு சென்று திரும்பி, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட 9 ஆயிரத்து 424 பேரின் இல்லங்களில் இன்று மாலைக்குள் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறைவு பெறும். மக்கள் நலன் கருதி இவர்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

அரசின் உத்தரவை மீறி பொதுவெளியில் நடமாடுபவர்களை அரசு தேடி வருகிறது. அவ்வாறு வீட்டைவிட்டு வெளியில் சென்று நடமாடினால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.