தற்போதைய செய்திகள்

வேதாரண்யத்தில் ரூ.82.76 கோடியில் 816 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்-அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல்

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ரூ.82.76 கோடியில் 816 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியம்பள்ளி மற்றும் கைலவனம்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.82 கோடியே 76 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார்.

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியம்பள்ளி மற்றும் கைலவனம்பேட்டை ஆகிய பகுதிகளில் கஜா புயலினால் குடியிருப்பு வீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அகஸ்தியம்பள்ளி பகுதியில் ரூ.30 கோடியே 76 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் 300 குடியிருப்பு வீடுகளும்,

கைலவனம்பேட்டை பகுதியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 516 குடியிறுப்பு வீடுகளும் ஆக மொத்தம் ரூ.82 கோடியே 76 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் 816 குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை பொறுத்தவரை ஒரு வீடு தலா 400 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் நடராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர்.கிரிதரன், உதவி நிர்வாக பொறியாளர் ராஜதுரை, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அவை ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.