தற்போதைய செய்திகள்

வேலூரில் 6,459 பேருக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.சி.வீரமணி வழங்கினர்

வேலூர்

வேலூரில் 6459 பேருக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோர் வழங்கினர்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில், 200 சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 2,578 உறுப்பினர்களுக்கு ரூ.890.18 லட்சம், 138 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 1,857 உறுப்பினர்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ.133.40 லட்சம், மாற்றுத் திறனாளிகள் கடனாக 35 நபர்களுக்கு ரூ.17.25 லட்சம், சிறுவணிக கடனாக 57 நபர்களுக்கு ரூ.25.25 லட்சம், மத்திய காலக் கடனாக 220 விவசாயிகளுக்கு ரூ.241 லட்சம், பயிர்கடனாக 1 ,532 விவசாயிகளுக்கு ரூ.994.38 லட்சம் என மொத்தம் 6,459 நபர்களுக்கு ரூ.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அ.சண்முகசுந்தரம், ம.ப.சிவன்அருள், எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் திருகுண ஐயப்பதுரை அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் வேளாண் பணிகள் தங்குதடையின்றி செய்திட, வட்டியில்லா கடன்களும் வேளாண் உபகரணங்கள் வாங்க வேளாண்மைத்துறை சார்பில் 30 சதவீதம், 50 சதவீதம் மானியத்தில் டிராக்டர், டெய்லர், மருந்து தெளிப்பான்கள், விவசாய தளவாடங்களும், 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்தின் விளைவாக இந்தியாவில் தமிழகம் விவசாயத்தில் முதல் இடத்தில் உள்ளது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றார்.