தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு – முதலமைச்சர் பேச்சு

சென்னை

கொரோனா காலத்திலும் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 4,18,903 வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும், 51,711 வெளிநாடு வாழ் தமிழர்களையும், வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் நான் துவக்கி வைத்துள்ளேன். இந்த முகக்கவசங்கள், ஆகஸ்டு 5-ம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.

இதுவரை 46 லட்சம் முகக்கவசங்கள் மாநகராட்சி மூலமாக சென்னையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்திட அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காலங்களில் கூட இதுவரை 41 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 30,500 கோடி ரூபாய் முதலீடும், 67,200 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Corpus Fund) செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள் அவர்களை பரிசோதனை செய்து அரசு வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.

எனது தலைமையில், மாநிலம் மற்றும் மாவட்ட வங்கிகளுடனான கூட்டங்கள் நடத்தி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதால் மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிகளவில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்புதலைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் முழு ஒத்துழைப்பு வழங்கி செம்மையான முறையில் பணியாற்றி வருகிற அனைத்து அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.