தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 2401 பேருக்கு பணி நியமன ஆணை – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர், பிப். 8-
கடலூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 2401 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் வனிதா, கல்லூரி செயலர் பீட்டர் ராஜேந்திரம், மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலர் எகசானலி, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகை வழங்கினார்.

முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது;-

இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதிக தொழில் முதலீட்டை ஈர்த்து தொழில்துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2890 வேலைநாடுநர்களுக்கு இரண்டாம் கட்ட நேர் காணலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் முகாமில் 5291 வேலைநாடுநர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் 228 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.