சிறப்பு செய்திகள்

ஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்

கள்ளக்குறிச்சி

துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கும் புகார் பெட்டி திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ஸ்டாலின் இப்போதுதான் புகார் பெட்டி வைத்திருக்கிறார். இவர் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்பொழுதெல்லாம் மக்களைப் பார்க்க வில்லை, மக்களின் கோரிக்கையை கேட்கவில்லை. காலம் போன கடைசியில் புகார் பெட்டி வைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாராம்.

என்ன ஒரு ஏமாற்று வேலை. எண்ணிப்பாருங்கள் மக்களே. இப்படி எல்லாம் கவர்ச்சியாக பேசி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏனென்றால், கழகத்தில் இளஞ்சிங்கங்கள் நிறைந்திருக்கிறது. புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கழக ஆட்சி மீண்டும் தொடரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்திடும் விதமாக அனைத்து மாவட்டங்களுக்கும் நான் நேரடியாக சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடியது அம்மாவின் அரசு. புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு 27.1.2021 அன்று பிரம்மாண்டமான நினைவிடம் திறக்க இருக்கின்றோம். இந்திய வரலாற்றில் எந்த தலைவருக்கும் இப்படிபட்ட ஒரு நினைவிடம் அமைக்கப்படவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்னும் ஒரு செய்தியை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். நான் ஏற்கனவே ஒரு திட்டத்தை கொண்டு வரலாம் என்று எண்ணி அதை துவக்கி நடைபெறுகின்ற வேளையிலே தான் இந்த புகார் பெட்டி வைக்கின்ற திட்டம் ஸ்டாலினுக்கு கசிந்து இருக்கிறது. முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் ஒன்றை அம்மாவின் அரசு செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 15.9.2020 அன்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கின்றேன்.

மனுதாரர் வட்ட அலுவலகத்திற்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ தங்கள் வீட்டில் இருந்தபடியே கைபேசி, தொலைபேசி மூலமாகவோ, இணைதளம் வாயிலாகவோ, தபால் மூலமாகவோ, சமூக ஊடகத்தின் மூலமாகவோ தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். இத்திட்டம் தகவல் தொழில் நுட்பத் துறையின் மூலம் 12.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த 22.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.

இம்மனுக்களை பெற்று பரிசீலனை செய்வதற்கு ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தற்போது அதன் செயலாக்கம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை நான் பிப்ரவரி முதல் வாரத்தில் துவக்கி வைக்க உள்ளேன். இந்த மையம் பின்வரும் முறைகள் மூலமாக வரப்பெறும் புகார்கள் மற்றும் மனுக்களை ஒருங்கிணைந்து அவைகளை பூர்த்தி செய்யும். உதவி மையம் எண் 1100. இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல், கட்டுப்பாட்டு அறைக்கு தபால் மூலம் மனு, சமூகஊடகம், இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசு துறைகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

குறைதீர்க்கும் முகாம்களிலோ, இணையதளத்திலோ, அல்லது அரசு அலுவலகத்திலோ, குறைதீர்க்கும் மனுக்களை பெறும் போது வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகமாக உள்ளன. இதனையும் கருத்தில் கொண்டு இந்த மையங்களில் பெறப்படும் அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை மூலமாக உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படின் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் கோரிக்கைகளை குறைகளை பல்வேறு சிறப்பு திட்டங்களின் மூலமாக உடனுக்குடன் நிறைவேற்றி தீர்த்துவைக்கின்ற அரசு அம்மாவின் அரசு. நான் ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்து அந்த அறிவிப்பிற்கிணங்க 90 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது மென்பொருள் தன்மை பரிசோதனை நடைபெற்று வரும் இந்த தருணத்தில், தாங்கள் தான் புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்தது போல் எதிர்கட்சி தலைவர் அறிவித்திருப்பது விந்தையிலும் விந்தை.

மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி அம்மாவின் அரசு செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களை போல, “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

இத்திட்டம் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கின்ற விஷயம் எப்படியோ கசிந்து போய் தான் ஸ்டாலின் புகார் பெட்டியை வைக்க வந்திருக்கின்றார். ஆக,கழக அரசு தான் மக்களுடைய குறைகளை போக்குகின்ற ஒரே அரசாங்கம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.