தற்போதைய செய்திகள்

ஸ்டாலினுக்கு பொய்யைத் தவிர வேறு எதுவும் தெரியாது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

ஸ்டாலினுக்கு பொய்யைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று அமைச்சர் கே.செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்டத்தில் தொடர்ந்து ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வரும் வேளையில், கழக மாணவரணி சார்பில், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் பி.குமார் தலைமையில், 750 பேருக்கு அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கீழவெளி வீதியில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது;-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பாக முறையில் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று எந்த மாநிலத்திலும் வழங்கப்படவில்லை. மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு தொடர்ந்து மூன்று மாத காலமாக நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடைபெறும். தற்போது கூட அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படும் பொருட்கள் எந்தவித எடை குறைவின்றியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களை திசை திருப்பவும் தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்று திமுக.வின் ஒன்றிணைவோம் வா என்று நாடகத்தை உருவாக்கினார் ஸ்டாலின். அதன் மூலம் பெறப்பட்டுள்ள 98,000 மனுக்களில் எதுவும் உண்மையாக இல்லை.

மாவட்ட செயலாளர்களை வைத்து திமுக நாடகத்தை நடத்தி வருகிறது. அரசாங்கத்துடன் ஒரு கட்சியால் போட்டிபோட முடியாது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள் அதுபோல் கருணாநிதியை விட அவரது புதல்வன் ஸ்டாலின் அதிகமாக பொய்களை பேசி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக செய்தி தொடர்பாளர் அண்ணாத்துரை, மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஜோசப் தனுஷ்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.