ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
கழக அமைப்பு தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான மதனந்தபுரம் பழனி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம். பதவி சுகத்திற்காக பலர் போகலாம். அவர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதை கிடைக்காது. சாதாரண கிளை கழக செயலாளராக இருந்த எடப்பாடியார் முதலமைச்சரானார் என்றால் அவர் கட்சியின் மீது வைத்திருக்கும் தீராத பற்று தான் காரணம். தி.மு.க.வினர் கழகத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் என உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கழகத்தில் உள்ள அனைவரும் உண்மை தொண்டர்கள். யாரும் அதற்கு செவிசாய்க்க மாட்டார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஸ்டாலின் இதுவரை எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. ஆனால் கழக ஆட்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரணங்கள் வழங்கினர். பொங்கல் என்றாலே தமிழக மக்கள் நினைவில் வருவது புரட்சித்தலைவி அம்மா தான்.
பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், கரும்பு மற்றும் சிறப்பு பரிசாக பணமும் கொடுத்தார். அவரை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு கொடுத்தார். ஆனால் தற்போது ஸ்டாலின் பொங்கல் செய்ய தேவையில்லாத புளி, பூண்டு, மிளகாய் என 20 பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.
கழக ஆட்சியில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின் ரயில் நிலையத்தில் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என புகார் அளித்தார். உடனடியாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவர் எந்த நேரத்திலும் மதுரைக்கு சென்றாலும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் திரும்புவதற்கு வழிவகை செய்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் அவரை கொலை செய்ய முயற்சித்த நபர்களை கைது செய்து இருக்கலாம். ஏன் செய்யவில்லை.
கழக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆட்சியில் தான் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியா தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காக்கிறார்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில்ராஜன், ரேவதாட்சாயனி சுந்தரராஜன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எழுச்சூர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பட்டூர் இம்தியாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், மாங்காடு நகர செயலாளர் பிரேம் சேகர், குன்றத்தூர் நகர செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.