ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ரேசன் ஊழியர்களை அழைத்து சென்ற கூட்டுறவு துறை

கோவை,
கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பயனாளிகள் பெயரில் பங்கேற்க செய்ய வேண்டும் என் ரகசிய உத்தரவு வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், அனைத்து அரசுத் துறை அலுவலருக்கும் ஒரு அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பில் தமிழக முதல்வரின் நிகழ்ச்சிக்கு பயனாளிகளாக ஒவ்வொருவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 1350 ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் தலா இரண்டு பேர் என மொத்தம் 2700 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கடையிலும் உள்ள இருவருக்கும் பயனாளிகள் பேட்ஜ் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அவர்கள் சென்றதால் பெரும்பாலான ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை என்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல கூட்டுறவு வங்கிகளில் உள்ள அலுவலர்களும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு சென்றதால் அங்கேயும் வெறிச்சோடி காணப்பட்டது.