ரூ.1 கோடியில் புதிய மாரியம்மன் கோயில் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல்

சேலம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி, அத்திக்காட்டனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. தற்போது சிதிலமடைந்து காணப்படும் இக்கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு அதே இடத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு புதிய கோயில் கட்டப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை கோயில் வளாகத்தில் புதிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கோயில் அறக்கட்டளை தலைவர் ஏ.டி.ஆர்.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரம் சதுர அடி பரப்பில் கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என பல்வேறு அம்சங்களுடன் புதிய கோயில் கட்டப்பட இருக்கிறது. இப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் சின்னுசாமி, மணிமுத்து, நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.