சிறப்பு செய்திகள்

100 ஆண்டுகள் அம்மா ஆட்சி தொடர்ந்திட சபதம் ஏற்போம் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது 5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 7-ந்தேதி தொடங்கினார். நேற்று முன்தினம் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கங்களில் பிரச்சாரம் செய்தார். 3-ம் நாளாக நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளவென உற்சாகத்துடனும், எழுச்சியுடன் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவு திரண்டு வந்து முதலமைச்சரின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் இது. திமுக தலைவர் ஸ்டாலின் தில்லுமுல்லு செய்து, திட்டமிட்டு சதி செய்து வெற்றி பெறலாம் என்று அம்மாவின் அரசின் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். திமுகவினர் ஒரு வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பர்கூர்
தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கல்லூரி கொடுத்துள்ளோம்.

இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் மக்களின் மனதில் தெய்வமாக நிலைபெற்று நிற்பவர்கள் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.
சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்து கழகத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

ஒவ்வொரு தொண்டனும் எச்சரிக்கையோடு இருந்து கழகத்தை கட்டிக் காக்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கட்சி, ஆட்சி இரண்டையும் உடைக்க முயற்சித்த போது, அம்மாவின் அரசு ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்து மீண்டும் அம்மாவின் அரசு நிலைநாட்டப்பட்டது.

மீண்டும் அவர் புறப்பட்டு விட்டார், அவர் நான்காண்டு காலமாக அலைந்து அலைந்து பார்த்தார், யாரென்று உங்களுக்கே தெரியும், அது டி.டி.வி.தினகரன். அவர் கட்சியிலே பத்தாண்டு காலம் கிடையாது.

அம்மா அவர்கள் இருந்தபோது, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். ஏதோ தந்திரமாக கட்சியில் நுழைந்து கொண்டார். எவ்வளவோ சதி வலைகளை பின்னிக் கொண்டிருந்தார். கழகத்தால் ஒருபோதும் அவரை
ஏற்றுக்கொள்ளவே முடியாது. கழக, தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு எப்போதும் இந்தக் கட்சி தலை வணங்காது, தலை வணங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி மட்டும் அல்ல, கே.பி.முனுசாமி மட்டும் அல்ல, பல லட்சம் பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள், கழகத்தைச் சேர்ந்த தொண்டன்தான் இந்த கட்சிக்கு முதலமைச்சராக வர வேண்டும். இங்கே உழைப்பாளர்களுக்கும், விசுவாசமாக இருப்பவர்களுக்கும் தான் இடம் உண்டு. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் கழகம் தொடரும், தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.டி.வி.தினகரனே நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் கழகத்தை ஒருபோதும் நெருங்க முடியாது, உங்கள் கனவு பலிக்காது. மீண்டும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசை அமைப்போம், அமைப்போம், அமைப்போம்.

எனக்குப் பின்னாலும் கழகம் 100 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்குமென்று அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இன்னும் நூறாண்டுகாலம் அம்மாவின் ஆட்சி அதிகாரம் தொடர ஒவ்வொரு தொண்டனும் சபதம் ஏற்க வேண்டும், பாடுபட வேண்டும், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக வேட்பாளரை அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறச் செய்து அம்மாவின் அரசு அமைய பாடுபட வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

சுமார் 328 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணெகோல் கால்வாய் திட்டப் பணி விரைவாக முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் தொடரும்.

பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரை தொகுதியிலுள்ள 30 ஏரிகளில் நீர் நிரப்புவதற்கான நடவடிக்கையை அம்மாவின் அரசு
மேற்கொள்ளும். அதுமட்டுமல்ல, 2000 அம்மா மினி கிளினிக்குகளை கொண்டு வந்ததும் அம்மாவின் அரசுதான்.

தைப் பொங்கலின்போது ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கிய அரசு அம்மாவின் அரசு. கடந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு 1,000 ரூபாய் கொடுத்தோம்.

கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளின் மூலம் விலையில்லாமல் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு அத்துடன் 1,000 ரூபாயும் கொடுத்தோம். இதுபோல், கடந்த ஆண்டு பொங்கல் முதல் இந்த ஆண்டு வரை 4,500 ரூபாய் கொடுத்துள்ளோம்.

இந்த மாவட்டத்தில் ஏராளமான சாலைகள், பாலங்கள் அமைத்துள்ளோம். குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரி மழைக்காலங்களில் பொழிந்த நீரினை சேமித்து வைத்துள்ளோம். அம்மாவின் அரசு
தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர், வாக்களிப்பீர்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.