தற்போதைய செய்திகள்

100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்

திருப்பூர்

மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட துங்காவி ஊராட்சி பகுதியை சார்ந்த 100 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் ஏற்பாட்டில் வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் நவீனமுறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் குணம் தர்மத்தை கொடுக்கும். இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட எண்ணற்ற திட்டங்களை அறிவித்ததுடன் இந்த நோய்த்தாக்குதலை பேரிடர் காலமாக அறிவித்து அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் முதலமைச்சர் வைத்துள்ளார்.

முதல்வரின் செயல்பாட்டை பாராட்டும் வண்ணம் மத்திய அரசே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்ததில் தமிழகம் முதன்மை மாநிலம் என பாராட்டைப் பெற்றதாகும். அந்த அளவிற்கு முதலமைச்சர் கொடிய வைரஸ் தாக்குதலிலிருந்து மனித உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்ககைளை மேற்கொண்டு வருகிறார்.

பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்பொழுது தான் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என எண்ணி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா முக கவசம் வழங்க உத்தரவிட்டு அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகின்றன.

பொதுவாக, நோய்த்தாக்குதல் உள்ள இக்காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்த்து பாதுகாப்பாக இருந்து ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.