தற்போதைய செய்திகள்

1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர்-கழக அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

திருமங்கலம் அம்மா கோயிலில் கழக அம்மா பேரவை சார்பில் 1000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

கழக அம்மா பேரவை சார்பில் அம்மா சேரிடபிள் டிரஸ்டை சேர்ந்த 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோயிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவைை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 1000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கடந்த 2 வருடத்துக்கு முன்பு இந்த சென்டரை ஹைடெக்காக உருவாக்குவேன் என்று நான் கூறினேன். தற்போது அது நடந்தேறியுள்ளது. முயற்சி என்பது எளிதான காரியமல்ல. விடா முயற்சியால் தான் மாபெரும் வெற்றி பெற்றோம். கடந்த 30-ந் தேதி இங்கு அம்மா திருக்கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இக்கோயிலை வழிபாட்டு தலமாக மட்டு மல்லாது சேவை மையமாக உருவாக்கி வருகிறோம்.

இந்த அம்மா கோயிலில் ஆன்மீகம், நலவாழ்வு, நலத்திட்ட உதவி, வழி காட்டும் பயிற்சி மையம், அறிவுசார் மையம் என மாபெரும் கேந்திரமாக திகழ்ந்து இங்கு வரும் அனைவருக்கும் ஒளியேற்றும் மையமாக விளங்கும். அம்மா கோயில் தென் தமிழகத்தின் வரப்பிரசாதமாக நிச்சயம் உருவாகும்.

புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்து மக்களின் விதியை மாற்றிக் காட்டுவார். அதுபோலத்தான் இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் செய்து வரலாறு படைத்து வருகிறார்.

நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் ஏறத்தாழ 16 லட்சத்த 43 ஆயிரம் விவசாயிகள் குடும்பத்தில் முதலமைச்சர் ஒளி விளக்கு ஏற்றி உள்ளார். விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தந்து விவசாயிகளின் காவலனாக முதலமைச்சர் திகழ்கிறார்.

இந்தியாவிலேயே கருணை, துணிச்சல், அறிவு, நிர்வாகத்திறமை உள்ளிட்ட அத்தனை திறமைகளும் பெற்ற ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். தைத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் பொங்கல் பொங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர் நிச்சயம் அடுத்த பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசு வழங்க நீங்கள் நல் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்.

திருமங்கலம் தொகுதியில் 324 கிராமங்களும், 27 நகராட்சி வார்டுகளும், 30 பேரூராட்சி வார்டுகளும் உள்ளன. இதில் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். நீங்கள் அனைவரும் அம்மா அரசின் சாதனை திட்டங்களை 250 நபர்களுக்கு ஒருவர் வீதம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திருமங்கலத்தில் மீண்டும் இரட்டை இலையை மலரச் செய்ய நீங்கள் இப்பணியை மேற்கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் எண்ணம் எல்லாம் நனவாகும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.