திருப்பத்தூர்

102 பேருக்கு 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி – திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 102 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் வழங்கினார்.

வருவாய்த்துறையின் கணக்குகளை முடிப்பது சம்பந்தமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் 1429-ம் பசலி 2019-2020 ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் வட்டங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு ஜூன் மாதம் நடைப்பெற வேண்டியது ஊரடங்கு தடை உத்தரவால் ஜூலை மாதத்தில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு தடை நாட்களில் பொதுமக்களிடம் நிலம் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து நேரடியாக மனுக்களை பெறுவதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக மனுக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனடிப்படையில் திருப்பத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தணிக்கை நிகழ்வு நடைபெற்று அனைத்து வருவாய் கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு நேற்று நிறைவுற்றது.

இந்த நிறைவு நாள் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலமாக 394 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 102 மனுக்கள் ஏற்கப்பட்டது. 99 மனுக்கள் உரிய ஆவணங்களை இணைத்து வழங்காததால் நிராகரிக்கப்பட்டது. மேலும் 193 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இன்றைய தினம் முதியோர் உதவித்தொகை 29 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 44 பயனாளிகளுக்கும் பட்டா மாற்றம், திருத்தம், உட்பிரிவு பட்டா ஆணை 29 பயனாளிகளுக்கு மொத்தம் 102 பயனாளிகளுக்கு 60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடக்கமாக 3 பயனாளிகளுக்கு வழங்கினார். மற்ற பயனாளிகளுக்கு அவரவர் கிராமங்களிலேயே நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ப.சிவன்அருள், வட்டாட்சியர் மோகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாக்யலட்சுமி, மற்றும் அனைத்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.