தற்போதைய செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவையில் 2 புதிய ஊர்திகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இரண்டு 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், உதவிஆட்சியர் (பயிற்சி) அமித்குமார், துணைஆட்சியர் (பயிற்சி) அஜீதாபேகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர், ஆவின் தலைவர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையில் நாளை 9-ம்தேதி காலை 9.30 மணி முதல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம், ஆட்சியரக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேடைப்பணிகள் ஆகியவற்ை்ற நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ‘108’ அவசரகால ஊர்தி சேவைக்காக 2 புதிய ஊர்திகளின் சேவையை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது ‘108’ அவசரகால ஊர்திகள் 36 உள்ளது, இதில் 2 வாகனங்களில் வென்டிலேடர் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள 2 வாகனங்களுடன் சேர்த்து மாவட்டத்தில் ‘108’ அவசர கால ஊர்திகள் 38 ஆக உயர்ந்துள்ளது.