தற்போதைய செய்திகள்

1116 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெற ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட மஞ்சக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1116 நபர்களுக்கு ஓய்வூதிய ஆணையை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

தமிழக மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சாதாரண, சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தந்தார். அந்த வழியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் தமிழக முதல்வர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள் அல்லது பிள்ளைகள் இருந்தும், அவர்கள் ஆதரவு கிடைக்காமல் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எந்த நிலையிலும் துன்பபடக் கூடாது என்பதினை கருத்தில் கொண்டு, அடையாளம் கண்டு அவர்களின் துயரங்களை போக்குகின்ற வகையில் அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், மாவட்டம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்கள் பெறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக குடவாசல் பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அந்த மனுக்களில் தகுதியின் அடிப்படையில் இங்கு குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியை சார்ந்த 1116 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) பானுகோபன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், வட்டாட்சியர் பரஞ்ஜோதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.ஆர்.தென்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், குடவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் கே.ஜி.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.