காஞ்சிபுரம்

12 மகளிர் குழுக்களுக்கு ரூ.70 லட்சம் கடன் உதவி – வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காவாந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 12 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:-

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கறவை மாடுகளை வாங்கி வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளோரை ஊக்குவிக்கும் விதமாகவும் இத்தகைய கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பல்வேறு சிறு தொழில்களுக்கான கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய கடன் உதவிகளை பெற்று உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பங்கு சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். பல்வேறு தொழில்கள் தொடங்க கடனுதவிகள் அளித்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து நிலைநிறுத்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், அக்ரி க.நாகராஜ், கே.ஆர்.தர்மன், மாவட்ட பிரதிநிதியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான ஈ.வி.கே.குமார், களக்காட்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜீ, இளைஞர் அணி கே.எஸ்.கார்த்தி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வில்வபதி, கிளை கழக செயலாளர் அவளூர் சிதம்பரம் உள்ளிட்டோர் உள்ளனர்.