கன்னியாகுமரி

120 குடும்பங்களுக்கு அனைத்து வகை காய்கறிகள்- என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான, தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாம்பி கிராமத்தை சார்ந்த 120 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அனைத்து வகையான காய்கறிகளை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட, வெள்ளாம்பி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியப்பெருந்தலைவரும், தோவாளை ஒன்றிய கழக செயலாளருமான எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், அப்பகுதியில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு, அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் கோதுமை மாவு அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.‘

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தற்போதைய கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில், கழகத்தின் சொந்த நிதியிலிருந்து, தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாம்பி கிராமம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக, கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று உங்களுக்கு வெள்ளரிக்காய், தேங்காய், புடலங்காய், பூசணிக்காய், வாழைக்காய், பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் கோதுமை மாவு வழங்கப்படுகிறது. உங்களுக்கு அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்ட ஏதாவது குறைகள் இருந்தால், அது குறித்து எனக்கு தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம்.

மேலும், உங்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி ஏற்பட்டால், உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதற்கும் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். உங்களுடைய உடலுக்கும், உரிமைக்கும் நாங்கள் எப்போதும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்போம் என இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தோவாளை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் இ.சாந்தினி பகவதியப்பன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தா.மேரிஜாய், ஒன்றிய கழக இணைச் செயலாளர் ரமணி, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் செல்வகுமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூதைமகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.