சிறப்பு செய்திகள்

12,111 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1,114 கோடி கடனுதவி – முதலமைச்சர் தகவல்

சென்னை

கடலூர் மாவட்டத்தில் 12,111 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 1,114 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது.

மக்கள் அரசை நாடிச் செல்வதற்கு பதிலாக அரசே மக்களை நாடிச் சென்று அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதுதான் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 56,958 மனுக்களில் 38,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை 9,965 நபர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா 12,514 நபர்களுக்கும் இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித் துறை மூலமாக குடிமராமத்துத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 1,04,521 வீடுகளுக்கு ரூபாய் 84.33 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. சிதம்பரம் நகராட்சிக்கு பாதாள சாக்கடைத் திட்டம், கடலூர் நகராட்சி, புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 812 கிராம குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பண்ருட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 17 குடியிருப்புகள் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 18 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. திட்டக்குடி, பெண்ணாடகம், மங்கலம்பேட்டை, கங்கைகொண்டான், வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள், விருதாச்சலம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 625 குடியிருப்புகளுக்கு ரூபாய் 479 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 12,111 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 1,114 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு
ரூபாய் 1,687 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூபாய் 215 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில், இந்த ஆண்டு 1,554 மகளிருக்கு ரூபாய் 25 ஆயிரம் மானியத்துடன் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூபாய் 2.34 கோடி மானியம் வழங்கப்பட்டு, 8,947 மகளிர் அம்மா இரு சக்கர வாகனங்களை பெற்றுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.