தற்போதைய செய்திகள்

13 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஒப்புதல் – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்

சென்னை

13 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

சென்னை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்ட அரங்கில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தலைமையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 33-வது கூட்டம் 27.10.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் முனைவர் டாக்டர். இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் சு.பொன்னுசுவாமி, வாரிய பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உத்தேசமாக 13 லட்சம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் 2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண் தொழிலாளர்களுக்கு வேஷ்டி, துண்டு மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு புடவை ஆகியவற்றுடன் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுமதியுடன் இத்திட்டத்தினை செயல்படுத்தவும் வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

மேலும், கூட்டுறவு வங்கிகளின் கணக்கு வைப்பிற்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் நலத்திட்ட உதவிகளை மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்துதல், இரண்டாம்படி அடையாளத்துக்கான கட்டணத்தை நீக்குதல், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு Smart card வழங்குதல், இதர இடங்களில் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்படும் தொழிலாளர்களுக்கும் செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

16.05.2011 முதல் 30.09.2020 வரை 10,35,615 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு மொத்தம் 14.5 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.674 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.