தற்போதைய செய்திகள்

162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – திருவாரூரில் அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூரில் 162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு துறையின் சார்பில் 42 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 79 ஆயிரத்து 709 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி என 162 நபர்களுக்கு ரூ.42 லட்சத்து 79 ஆயிரத்து 709 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றத்திற்கு அம்மா அவர்கள் பெண்களை பாதுகாக்கின்ற வகையிலும் பார்த்து பார்த்து திட்டம் தந்தார். அவரது வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மா தீட்டி செயல்படுத்திய திட்டங்களை அப்படியே செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். அம்மா அவர்களின் கனவு திட்டத்தினை இந்தியாவே உற்றுநோக்குகின்ற வகையில் பாரத பிரதமரை அழைத்து வந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

அன்றிலிருந்து உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ரீலேகா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, கமலாம்பிகா கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி கூட்டுறவு வங்கித்தலைவர் பி.கே.யு.மணிகண்டன், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.