தற்போதைய செய்திகள்

1700 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவ, மாணவிகளுக்கு ரூ.67 லட்சத்து 9 ஆயிரத்து 118 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் தேவையை அறிந்து, கோரிக்கைக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பல்வேறு மகத்தான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளிகளுக்கு வெகு தொலைவிலிருந்து வரும் மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் மாணவர்களுக்கு நன்மை அளிக்கும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 2020-2021-ம் கல்வியாண்டில் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவ, மாணவிகளுக்கு ரூ.67 லட்சத்து 9 ஆயிரத்து 118 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், முதன்மை கல்வி அலுவலர் மு.ராமன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், கமலாம்பிகை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி கூட்டுறவு வங்கித்தலைவர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.