தற்போதைய செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்றத்தொகுதி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல பொறுப்பாளர் வினுபாலன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. சாதாரண ஏழை எளிய அனைத்து தரப்பு மக்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்துகிற அரசு அதிமுக அரசு மட்டும் தான்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என அவர் கூறுவது தவறான கருத்து. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் மாநில வளர்ச்சிப்பணிகளில் மாநில அரசின் செயல்பாடு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் சிரமமின்றி பயன் அடைய வேண்டும் என்பதற்காக எளிய வழிமுறையை தந்துள்ளது. இதில் பயனடைய விரும்பும் தகுதியுடையவர்கள் நேரடியாகவே அவர்களின் பெயர்களை பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த எளிய வழிமுறையினை சிலர் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இந்த பட்டியலை மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் நிலையில் யாரெல்லாம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்களோ அவர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதோடு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.ஆசைமணி, அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராமன், ஒன்றிய செயலாளர்கள் திருவாரூர் மணிகண்டன், மன்னார்குடி தமிழ்ச்செல்வன், கொரடாச்சேரி சேகர், பாஸ்கரன், கொரடாச்சேரி நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், கழக நிர்வாகிகள் கலியபெருமாள், ரயில் பாஸ்கர், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.