தற்போதைய செய்திகள்

222 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடியில் நலத்திட்ட உதவி – தருமபுரில் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கும்பாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் 15 மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 198 உறுப்பினர்களுக்கு கடன் உதவியும் ரூ.14.14 லட்சம் மதிப்பில் 24 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஆ.தணிகாசலம் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது முன்எப்பொழுதும் இல்லாத வகையில் விவசாய பெருமக்களுக்கு ரூ.3000 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் வழங்க ஆணையிட்டார். மேலும் பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்தும் பட்சத்தில் முழுமையாக வட்டி சலுகை வழங்கும் வகையில் ஆணையிட்டார். தற்போது முதலமைச்சர் பொறுப்பேற்ற போது விவசாய பயிர்கடனை ரூ.10,000 கோடி வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் கும்பாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே ரூ.118.66 லட்சம் மதிப்பில் பயிர் கடன் மற்றும் நகைக்கடனும் ரூ.237.75 லட்சம் மதிப்பில் நகைகடனும், ரூ.44.70 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் உதவியும், ரூ.2.86 லட்சம் மதிப்பில் சரக்கீட்டு கடனும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இப்போழுது ரூ.1.40 கோடி மதிப்பில் 15 மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 198 உறுப்பினர்களுக்கு கடன் உதவியும் ரூ.14.14 லட்சம் மதிப்பில் 24 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு சார்பில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7 சதவீதம் வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகளின் கடன் சுமையை நீக்கும் வண்ணம் அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடி திட்டம், 2016-ன்படி கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2016ல் நிலுவையுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய கால பயிர்க்கடன்கள், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்ட விவசாய கடன்கள், மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்பட்ட குறுகிய கால கடன்கள், மத்திய கால வேளாண் கடன்கள் மற்றும் பண்ணை சார்ந்த நீண்ட காலக் கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ.139 கோடியே 72 லட்சம் வேளாண் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடனுதவி பெறும் விவசாய பெருமக்களும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திகொள்ளவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், ஒன்றியக்குழுதலைவர் சாந்தி பெரியண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் செந்தில் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் செல்வராஜ், கோவிந்தசாமி, சந்திரன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி ஆகியோர் உட்பட கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.